வந்திருக்கும் 2011-ம் ஆண்டு எல்லோருக்கும் எல்லாமும் தரவேண்டும் என்பதே அனைவரது என்னமாக இருக்கவேண்டும். பிறந்திருக்கும் இந்த ஆண்டு பல நம்பிக்கைகளை தந்திருந்தாலும் சில அச்சங்களுக்கும் அது அச்சாரம் போடவும் தவறவில்லை. அவற்றில் முக்கியமான இரண்டு...
1. விண்ணில் பறக்கும் விலைவாசி
2. எமனின் ஏஜண்டாக இருக்கும் தங்க நாற்கர சாலைகள்
முந்தி சென்றது பேருந்தை எட்டிப்பார்த்தேன் கட்டணம் - என்பது விண்ணில் பறக்கும் விலைகள் குறித்த வேதனை வரிகள்.
இந்த ஆண்டு பிறக்கும்போதே இந்த கவலையை சாமானியனின் முதுகில் சுமத்த தவறவில்லை. பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடியபோது கூட இந்த அளவிற்கு உணவுப் பொருள்களின் பண வீக்கம் இல்லை என்பது விவரம் அறிந்தவர்கள் கூறும் உண்மை. இந்த ஆண்டு உணவு பொருள்களின் பணவீக்கம் 14% தை தாண்டி 15% தை எட்டி பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருந்ததை விட காய்கறிகளின் விலை இந்த ஆண்டு மிக கடுமையாக உள்ளது. வெங்காயம் மட்டுமே விலை அதிகமாக உள்ளது என்பது சாதரணமாக மீடியாக்களில் உலா வரும் செய்தியாக உள்ளது ஆனால் கீரை கட்டு முதல் கேரட்டுகள் வரை அனைத்துமே 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை எகிறியுள்ளது. வெங்காயத்தின் விலை உயர்விற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டன- விளைச்சல் குறைவும், மழையினால் பலத்த சேதமும் முக்கியமான காரணமாக கருதப் படுகிறது.
எதிர்பாரா விதமாக பெய்து விட்ட மழையினால் அதிக சேதம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான் என்றாலும் விளை நிலங்கள் எல்லாம் கட்டிட காடுகளாக மாறிகொண்டிருக்கிறது என்பது குழந்தைகளுக்கு கூட தெரிந்த சேதிதான். ஆனால் இது அரசுக்கு மட்டும் எவ்வாறு தெரியாமல் போனது? தெரிந்திருந்தால் நமது நாட்டில் இவ்வளவுதான் விளை நிலங்கள் இவ்வளவுதான் இந்த ஆண்டு விளைச்சல் இருக்கும் அதற்கேற்ப உணவு பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை அதற்க்கு இருந்திருக்குமே. ஆனால் அதற்கான கணக்கீடுகளோ அல்லது முன்னேற்பாடுகளோ செய்யவில்லை. மாறாக இருக்கின்ற வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்தது அரசு. இப்போது மக்களோடு சேர்ந்து அரசும் கவலை படுகிறது என்னவென்று சொல்ல?
தற்போது பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி இந்திய பொருளாதாரம் தற்போது வளரும் நிலையில் உள்ளது இதனால் பண புழக்கம் அதிகரித்துள்ளது இதன் விளைவாக பொருள்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பண வீக்கம் அதிகமாக உள்ளது அரசு உடனடியாக தலையிட்டு உற்பத்தி பெருக்கத்தையும் விலையையும் கட்டுக்குள் கொண்டு வருவத்தில் அக்கறை செலுத்துவது அவசர அவசியம். இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பது பொருளாதார நிபுணர்கள் அடிக்கும் எச்சரிக்கை மணி
செய்யுமா அரசு?
வீணாகும் உணவு பொருள்களை ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் சொன்னபோது அது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கொந்தளித்த உணவுத் துறை அமைச்சர் இருக்கும் அமைச்சரவை அல்லவா?
2 வது பிரச்சனை உயிர்பலி கேட்கும் தங்க நாற்கர சாலைகள்
தங்க நாற்கர சாலைகள் உண்மையில் நம் நாட்டை பொறுத்த மட்டில் மிக பெரிய வரபிரசாதம். ஆனால் எப்படி இந்தியனுக்கு கழிவறையை பயன்படுத்த தெரியாதோ அது போல சாலையையும் சரியாக பயன்படுத்த தெரியவில்லை. இதனால் அரும்பெரும் உயிர்கள் சாதரணமாக சாகடிக்கப் படுகின்றன இந்த ஆண்டின் முதல் தேதியில் சேலம் மாவட்டம் சங்க கிரியை சேர்ந்த வெங்கடாசலமும் அவரது மனைவி மணிமேகலையும் புத்தாண்டையொட்டி திருப்பதி கோவிலுக்கு செல்ல குடும்பத்தினருடன் காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த கார் கிருஷ்ணகிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது இதில் காரில் பயணம் செய்த 4 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளனர். இது போன்று சபரி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்களும் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதால் உயிர் இழந்துள்ளனர். இந்த உயிர் இழப்புகளுக்கு கவன குறைவு காரணம் என்றாலும் லாரி ஓட்டுனர்களின் அசட்டு தனமே மிக முக்கிய காரணம்.
விரிந்து பரந்த சாலையில் எங்கு வாகனத்தை நிறுத்தவேண்டும், ஒரு வாகனத்தை முந்தி செல்ல வலது பக்கம் செல்ல வேண்டுமா அல்லது இடது பக்கம் வழியாக செல்ல வேண்டுமா என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம். இடம் இருக்கிறது என்பதற்காக சாலையில் எங்கு வேண்டும் என்றாலும் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு முன்னால் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதா அல்லது சென்று கொண்டிருக்கிறதா என்று கூட தெரிவதில்லை. இதில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறைந்த பட்சம் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை விளக்குகளை எரிய விட வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை. இதை கண்டிக்க வேண்டிய, தண்டிக்க வேண்டிய காவலர்களும் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் வேதனை. தன் கடன் மாமூல் வாங்குவதே என்று எண்ணுகிறார்களோ என்னவோ. நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை இவ்வாறு மாமூலுக்காக திடீரென நிறுத்துவதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. என்று தீரும் இந்த சோகம்?

1 comment:
சாலைகளை கவனமாக கடப்பதும் ,விலைகளை கவனமாக சரிபடுத்துவதும் இந்த ஆண்டின் முக்கிய குறிக்கோளாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.தீமைகள் நடப்பது கண்டு வேடிக்கை பார்க்காமல் குரல் கொடுக்க தொடங்கியதே இந்த மாற்றங்களின் வருகைக்கு ஒரு அடையாளம் தான் இந்த விழிப்புணர்வு வானவில் வருகையை வரவேற்கிறேன் மழைக்காக காத்திருப்போம்.
Post a Comment