Wednesday, January 19, 2011

கருப்புப்பணம் - கொண்டு வர மறுக்கும் கருப்பு ஆடுகள்

50 காசு கொடுத்து வாங்கும் தீப்பெட்டி முதல் 50 லட்சங்கள் வரை செலவழித்து வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அப்பாவி பொது ஜனம் வரி கட்டி விட்டுதான் வாங்க முடியும். அன்றாடங்காய்ச்சிகள் முதல் சம்பள சாதி வரை வரிகள் என்னும் வரையறைக்குள் நிற்க  சில தொழில் அதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள் எனும் பண முதலைகளால் இந்திய பணம் சுமார் 25 லட்சம் கோடிகள் முதல் 75 லட்சம் கோடிகள் வரை முடங்கி கிடக்கிறது சுவிஸ் வங்கியில் .    முடங்கி கிடக்கும் இந்த பணம் வந்தால் வசந்தமாகிவிடும் நாடு என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுது இந்தப் பணம் பயன்படுத்தப்படும் விதம்தான் நம்மை நடுக்கம் கொள்ள வைக்கிறது. நம் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கவும், பங்குச்சந்தையை முடக்கவும் முதுகெலும்பாக பயன்படுத்தப் படுகிறது என்பதுதான் உச்சந்தலையில் அச்சம் எனும் ஆணியை அடித்து செல்கிறது. சுவிஸ் வங்கி இவ்வாறு ரகசியம் காப்பதே இது அத்தனைக்கும் காரணம் என்பது அடிப்படை காரணம்.  இந்த ரகசிய ரசவாதம் சுவிஸ்சில் எப்படி தொடங்கியது என்றால்...

ரகசிய கணக்குகளின் ரகசியம்

 ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டுகொண்டிருந்தபொது யூதர்களின் வங்கி கணக்குகளை கைப்பற்றி விட்டு அவர்களை கொன்றுவிட திட்டமிட்டார். இதன் விளைவாக சுவிஸ் நாடு வங்கிகளில்  கணக்குகளின் ரகசியம் என்பதை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை கணக்கு வைத்திருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த ரகசியம் வெளிவிடப்படாமல் ரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளது.  இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று வங்கிகள் வாடிக்கையாளர்களின் பெயர்களில் கணக்கு வைக்காமல் வெறும் எண்களை வைத்தே பராமரித்து வருகிறது.

நிலைமை இப்படி நீடிக்க உலக அளவில் நிதி நெருக்கடி அரசுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்காவும் ஜெர்மனியும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்க அந்த வங்கிகளும் 20 ஆயிரம் அமெரிக்கர்களின் கணக்குகளையும் 1400 ஜெர்மானியர்களின் கணக்குகளையும் கொடுத்துள்ளது. இதில் வெறும் 600 பேர்தான் ஜெர்மானியர்கள் மற்றவர்கள் பிற நாடுகளை சார்ந்தவர்கள் இந்தியர்களும் இதில் இல்லாமல் இல்லை இந்த விவரங்களை அளிப்பதற்கு வங்கிகள் தயார் ஆனால் அதை வாங்குவதற்கு நம் அரசு தயாராக இல்லை. இவ்வாறு முடக்கப் பட்டிருக்கும் பணம் ஏறத்தாழ 25 லட்சம் கோடிகள் முதல் 75 லட்சம் கோடிகள் வரை இருக்கலாம் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு. இந்த பணம் வெளிக்கொண்டு வரப்பட்டால் இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு வரியற்ற பட்ஜெட் போட முடியும் என்கிறார் பா.ஜ.க. வை சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி.


கணக்கு துவங்க

சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்க 5ஆயிரம் சுவிஸ் பணம் இருந்தாலே போதும் துவங்கி விடலாம். ஆனால் இந்த கணக்கில் கருப்பு பணத்தை கற்பு கெடாமல் பாதுகாக்க முடியாது. அதற்கென ஸ்பெஷல் அக்கவுண்ட் ஆரம்பித்தால்தான் ஆயிற்று. அது இந்நாட்டு மன்னர்களால் (எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாயிற்றே)  முடிகின்ற காரியம் அல்ல. அது மந்திரிகளால் மட்டுமே இயலுகின்ற காரியம் இந்திய பணம் சுமார் ஒன்றரைக்கோடி வேண்டும். இது இருந்தாலே நீங்கள் இருக்கின்ற இடத்திலிருந்து ஆரம்பித்துவிடலாம் ஆட்டத்தை. அதற்கு ஏற்கெனெவே அங்கு கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் உங்களை அறிமுகப்படுத்த வேண்டும் அவ்வளவுதான். அதன் பின்னர் சுவிஸ் வங்கியின் பிரதிநிதி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார் ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டு விடும். அதன் பின்னர் எவ்வளவு பணத்தை கொண்டு கொட்டினாலும் நீங்கள் அதற்க்கு வருமான கணக்கு  காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் இந்த கொள்ளைக்காரர்களுக்கு இன்பம். 

எந்தெந்த கட்சிகளுக்கு

பொதுவாக இந்திய இனம் பொது கழிவறையில் மட்டுமே சாதி மத பேதமின்றி இன மத பேதமின்றி இருக்கிறது என்பார்கள் அது போல இந்த விவகாரத்திலும் கட்சி பேதமின்றி அனைத்து கட்சிகளின் க(றை)ரை வேட்டிகளும் குர்தாக்களும் கணக்கு வைத்துள்ளனர்.  எல்கினா என்பவர் எழுதின புத்தகத்தில் இடது சாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார் என்பது பத்திரிகை செய்தி. அது போல ஒரு முன்னாள் பிரதமருக்கு சில ஆயிரம் கோடிகள் இந்த வங்கியில் உள்ளது என்று வெளிநாட்டு இதழ் ஒன்று எழுதியுள்ளது. ஆனால் இந்த செய்தியை மறுக்க அவர் உயிரோடு இல்லையென்றாலும் அவரது கட்சியோ அல்லது அவரது குடும்பத்தினரோ அதை மறுக்கவும் இல்லை பொங்கியெழவும் இல்லை. என்றால் அவருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சரி அந்த கட்சிதான் இவ்வாறு என்றால் அடுத்து வந்த எதிர் கட்சியும் இதை கண்டு கொள்ளவில்லை என்றால் தங்களுக்குள்ள தொடர்பு எங்கே வெட்ட வெளிச்சமாகி விடுமோ என்ற பயம்.

இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் இப்போது சாட்டையை கையில் எடுத்துள்ளது. முடங்கி இருக்கும் கருப்பு பணம் தேசத்தின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் இந்த பணம் யார் யாருக்கு சொந்தம் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது ஆனால் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது

இந்நிலையில் இந்த கணக்கு விவரங்களை வெளியிட போவதாக விக்கி லீக்ஸ் இணைய தளம் கூறியுள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் பெயர் விவரங்கள் முறையாக வெளி வந்து விட்டால் பிரச்சனை இல்லை மாறாக இந்த விவரங்கள் சீனாவிடமோ அல்லது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பிடமோ சிக்கினால் அவர்கள் அதை வைத்துக்கொண்டு நமது நாணயமிக்க அரசியல்வாதிகளை பிளாக் மெயில் செய்ய கூடும் என்பதுதான் அச்சத்தின் அளவுகோலை அதிகரிக்கிறது.

படித்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள் கருத்துக்களை

அன்புடன்
அ.ஜெ.ராஜ சேகர்

Monday, January 3, 2011

ஆண்டே 2011-ம் ஆண்டே

வந்திருக்கும் 2011-ம் ஆண்டு எல்லோருக்கும் எல்லாமும் தரவேண்டும் என்பதே அனைவரது என்னமாக இருக்கவேண்டும்.  பிறந்திருக்கும் இந்த ஆண்டு பல நம்பிக்கைகளை தந்திருந்தாலும் சில அச்சங்களுக்கும் அது அச்சாரம் போடவும் தவறவில்லை. அவற்றில் முக்கியமான இரண்டு...

1. விண்ணில் பறக்கும் விலைவாசி
2. எமனின் ஏஜண்டாக இருக்கும் தங்க நாற்கர சாலைகள்

முந்தி சென்றது பேருந்தை எட்டிப்பார்த்தேன் கட்டணம் - என்பது விண்ணில் பறக்கும் விலைகள் குறித்த வேதனை வரிகள்.
          இந்த ஆண்டு பிறக்கும்போதே இந்த கவலையை சாமானியனின் முதுகில் சுமத்த தவறவில்லை.  பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடியபோது கூட இந்த அளவிற்கு உணவுப் பொருள்களின் பண வீக்கம் இல்லை என்பது விவரம் அறிந்தவர்கள் கூறும் உண்மை. இந்த ஆண்டு உணவு பொருள்களின் பணவீக்கம் 14% தை தாண்டி 15% தை எட்டி பிடித்துள்ளது.   கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருந்ததை விட காய்கறிகளின் விலை இந்த ஆண்டு மிக கடுமையாக உள்ளது. வெங்காயம் மட்டுமே விலை அதிகமாக உள்ளது என்பது சாதரணமாக மீடியாக்களில் உலா வரும் செய்தியாக உள்ளது ஆனால் கீரை கட்டு முதல் கேரட்டுகள் வரை அனைத்துமே 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை எகிறியுள்ளது. வெங்காயத்தின் விலை உயர்விற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டன- விளைச்சல் குறைவும், மழையினால் பலத்த சேதமும் முக்கியமான காரணமாக கருதப் படுகிறது.

எதிர்பாரா விதமாக பெய்து விட்ட மழையினால் அதிக சேதம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான் என்றாலும் விளை நிலங்கள் எல்லாம் கட்டிட காடுகளாக மாறிகொண்டிருக்கிறது என்பது குழந்தைகளுக்கு கூட தெரிந்த சேதிதான். ஆனால் இது அரசுக்கு மட்டும் எவ்வாறு தெரியாமல் போனது? தெரிந்திருந்தால் நமது நாட்டில் இவ்வளவுதான் விளை நிலங்கள் இவ்வளவுதான் இந்த ஆண்டு விளைச்சல் இருக்கும் அதற்கேற்ப உணவு பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை அதற்க்கு இருந்திருக்குமே. ஆனால் அதற்கான கணக்கீடுகளோ அல்லது முன்னேற்பாடுகளோ செய்யவில்லை. மாறாக இருக்கின்ற வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்தது அரசு. இப்போது மக்களோடு சேர்ந்து அரசும் கவலை படுகிறது என்னவென்று சொல்ல?

தற்போது பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி இந்திய பொருளாதாரம் தற்போது வளரும் நிலையில் உள்ளது இதனால் பண புழக்கம் அதிகரித்துள்ளது இதன் விளைவாக பொருள்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பண வீக்கம் அதிகமாக உள்ளது அரசு உடனடியாக தலையிட்டு உற்பத்தி பெருக்கத்தையும்  விலையையும் கட்டுக்குள் கொண்டு வருவத்தில் அக்கறை செலுத்துவது அவசர அவசியம்.  இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பது பொருளாதார நிபுணர்கள்  அடிக்கும் எச்சரிக்கை மணி

செய்யுமா அரசு?

வீணாகும் உணவு பொருள்களை ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் சொன்னபோது அது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கொந்தளித்த உணவுத் துறை அமைச்சர் இருக்கும் அமைச்சரவை அல்லவா?

2 வது பிரச்சனை உயிர்பலி கேட்கும் தங்க நாற்கர சாலைகள்

தங்க நாற்கர சாலைகள் உண்மையில்  நம் நாட்டை பொறுத்த மட்டில் மிக பெரிய வரபிரசாதம். ஆனால் எப்படி இந்தியனுக்கு கழிவறையை பயன்படுத்த தெரியாதோ அது போல சாலையையும் சரியாக பயன்படுத்த தெரியவில்லை.  இதனால் அரும்பெரும் உயிர்கள் சாதரணமாக சாகடிக்கப் படுகின்றன இந்த ஆண்டின் முதல் தேதியில் சேலம் மாவட்டம் சங்க கிரியை சேர்ந்த வெங்கடாசலமும்  அவரது மனைவி மணிமேகலையும் புத்தாண்டையொட்டி திருப்பதி கோவிலுக்கு செல்ல குடும்பத்தினருடன் காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த கார்  கிருஷ்ணகிரி  அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது இதில் காரில் பயணம் செய்த 4 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளனர். இது போன்று  சபரி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்களும் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதால் உயிர் இழந்துள்ளனர். இந்த உயிர் இழப்புகளுக்கு கவன குறைவு காரணம் என்றாலும் லாரி ஓட்டுனர்களின் அசட்டு தனமே மிக முக்கிய காரணம்.

விரிந்து பரந்த சாலையில் எங்கு வாகனத்தை நிறுத்தவேண்டும், ஒரு வாகனத்தை முந்தி செல்ல வலது பக்கம் செல்ல வேண்டுமா அல்லது இடது பக்கம் வழியாக செல்ல வேண்டுமா என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம். இடம் இருக்கிறது என்பதற்காக சாலையில் எங்கு வேண்டும் என்றாலும் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு முன்னால் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதா அல்லது சென்று கொண்டிருக்கிறதா என்று கூட தெரிவதில்லை. இதில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறைந்த பட்சம் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை விளக்குகளை எரிய விட வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை. இதை கண்டிக்க வேண்டிய, தண்டிக்க வேண்டிய காவலர்களும் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் வேதனை. தன் கடன் மாமூல் வாங்குவதே என்று எண்ணுகிறார்களோ என்னவோ. நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை இவ்வாறு மாமூலுக்காக திடீரென நிறுத்துவதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. என்று தீரும் இந்த சோகம்?  

Tuesday, April 27, 2010

பேரன்புடையீரே பெற்றோரே ...

நர்சரியில் நாற்றுகளை நடுவதற்கு முன் ...

அது ஒரு அழகான காலை வேளை. வானம் மப்பும் மந்தாரமுமாக மழையை அனுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருந்துது அதே நேரம் நான் மட்டும் இளைச்சவனா ன்னு  சூரியனும்  தன்னோட  வேலையை தெளிவாக செய்ய ஆரம்பிசிருந்தது. அந்த நேரம்  எங்க வீட்டு ப்ரைம் மினிஸ்டர் அதான் என்னோட பொண்ணு எங்க வீட்டு கட்சி தலைவி (சதி அதாங்க என்னோட  மனைவி) கிட்ட போயி வெளியில விளையாட போட்டுமான்னு  ரொம்ப பணிவுடன்? அனுமதி கேட்க என்னோட சதி (மனைவிக்கு என்ன ஒரு அழகான பேரு தமிழ் ல ) வெளியில விளையாட விட வேண்டாங்கறதுக்காக அம்மாவுக்கே உரிய அக்கறையோட இல்லம்மா இப்ப மழை வர்ற மாதிரி இருக்கு சாயங்காலம் விளையாட போலாம் என சொல்ல வழக்கு என்னிடம் வந்தது நானும் அம்மா சொல்ற மாதிரி கேளும்மா என கையை விரிக்க (நமக்கு  மனைவி  சொல்லே மந்திரம்  ) என்னோட மகளும் சோகமா முகத்த வெச்சுட்டு போயிட்டா. அப்புறம் சாயங்காலம் ஒரு 5  மணி இருக்கும் திரும்பவும் என் பொண்ணு வந்து அம்மா வெளியில மழை பெய்யுதான்னு கேக்க இல்லன்னு என் மனைவியும் சொல்ல அடுத்த செகண்டே அப்ப நான் இப்ப வெளியில விளையாட போலாமான்னு கேக்க இப்ப பதிலே சொல்ல முடியல .

இதை நான் ஏன் சொன்னேன்னா இப்படி நம்ம வாயை அடிக்கிற மாதிரி நம்ம குழந்தைங்க பதில் சொல்லும்போது பூரிச்சு போற நாம அதுங்கள ஸ்க்கூல்ல கொண்டு போயி விடுறதுக்கு முன்னாடி அவங்க ஸ்க்கூல்ல எப்படி நடந்துக்கணும்னு நாம சொல்லி கொடுகிறோமான்னு கேட்ட பெரும்பாலும் இல்லன்னுதான் சொல்வோம். அவுங்க ஸ்க்கூல்ல எப்படி நடந்துக்கணும்னு சின்ன சினந்தான் சில பயிற்சிகளை நாம கொடுத்தோமுன்னா அவுங்களும் ஸ்க்கூல்ல கிளாஸ்க்கு வெளியில நிக்கிற பசங்கள இல்லாம அவுட் ஸ்டான்டிங் ஸ்டுடன்சா இருப்பாங்க தானே

  • குழந்தைங்கள ரொம்ப செல்லம் கொஞ்சாம தங்களோட சாப்பாட்டை தாங்களாகவே சாப்பிட சொல்றது. ஏன்னா ஸ்க்கூல்ல சாப்பாடை யாரும் ஊட்டி விட மாட்டாங்க
  • கழிப்பறையை எப்படி பயன்படுத்துறது, உள்ளாடைகளை எப்படி சரியாய் பயன்படுத்துறது
  • சக மாணவர்கள் கிட்ட எப்படி நடந்துக்கிறது. சரியான பகிர்வு விட்டு கொடுக்கிறது .
  • யாராவது எந்த உதவியாவது செஞ்சா அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றது
  • என்னென்ன பொருள் கொண்டு போறோமோ அந்த பொருட்கள மறக்காம திரும்ப கொண்டு வர்றது
  • எவ்வளவு நல்ல பொருளா இருந்தாலும் அடுததவங்க பொருள் மேல ஆசைப்படாம இருக்கிறது
  • வீட்ல பெத்தவங்கள ஒருமையில கூப்பிட்டே பழகி இருப்பாங்க அதே பழக்கம் பள்ளியில டீச்சர் கிட்ட வந்த எல்ல  டீச்சர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்க அதனால அவுகளை மரியாதையா கூப்பிட சொல்லி கொடுக்கிறது
  • ஸ்க்கூல்ல வீட்டுக்கு போறதுக்கு பெல் அடிச்சதுமே அடிச்சு பிடிச்சு வெளியில ஓடாம நிதானமா வெளியில வர்றதுக்கு சொல்லி தர்றது ரொம்ப முக்கியம். ஏன்னா கும்பகோணம் பள்ளி தீ விபத்துல நிறைய குழந்தைங்க நெரிசல்ல மாட்டிகிட்டதுனலாத்தான் அந்த பிஞ்சுகள் கருகி போச்சு.
அ. ஜெ. ராஜசேகர்
திருநெல்வேலி

Sunday, January 17, 2010

கண்ணியமில்லா கண்டக்டர்கள்

அரசுப் பணியாளர்கள்  மிஸ்டர் பொது ஜனத்தின் சேவகன் என்றுதான்
அரசு சொல்கிறது  இந்த அப்பாவி பொது ஜனத்தின் வரியில் தான் அத்தனை அரசு ஊழியர்களும் வயிறு வளர்க்கிறார்கள் என்பது ஒருபுறம் என்றலும் அவர்கள் வதைப்பதும் இந்த பொது ஜனங்களைதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஜனவரி மாதம் 9 ம் தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து பழனிக்கு அரசுப் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்தப் பேருந்து கியம்புவதற்கு முன்னர் வழக்கம்போல அந்தப் பேருந்தின் நடத்துனன் திருநெல்வேலி மதுரை என்று கூவிக் கொண்டிருந்தான். அணைத்து இருக்கைகளும் நிறைந்ததும் பேருந்து கிளம்பியது. அப்போது நடுத்தர வயதுடைய பொது ஜனம் கையில் குழந்தையோடு காலியாக இருந்தா இருக்கையில் அமர்ந்தார். அவரிடம் எங்கே போக வேண்டும் என்று கேட்ட அந்த நடத்துனன் அந்த பொது ஜனம் வள்ளியூர் என்றதும் எல உனக்கு எல்லாம் அறிவு கிடையாதா இது பழனி போற பஸ் இதுல வள்ளியூர் போறதுக்கு ஏறி இருக்க அதுலயும்  சீட் ல உக்காந்திருக்க உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா என்று ஏக வசனத்தில் திட்டியதுடன் அவரை வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டதுடன் தொடர்ந்து தே மகனே என்றெல்ல்லாம் திட்ட ஆரம்பித்தான். இதைக் கண்டும் கேட்டும் வழக்கம்போல் பிற பயணிகள் அமைதி காக்க ஒருவர் மட்டும் அந்த நடத்துனனிடம் பயணிகளிடம் கொஞ்சம் மரியாதையாக நடக்கலாமே  என்று கேட்டதும் அந்த நடத்துனனின் நண்பர்கள் சிலர் இவரிடமும் எகிற வேறு வழி இல்லாமல் இவரும் அமைதியாகிவிட அந்த அப்பாவி பொது ஜனம் அந்தப் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அதன் பின்னர் வள்ளியூர் வந்ததும் இரண்டு நிமிடங்கள் நின்றே அந்தப் பேருந்து சென்றது.

யாரிடம் சொல்ல  

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் அது சரி இவர்கள் மந்திரிகள் ஆவதெப்போ?

Monday, October 19, 2009

ஆதவன் சினிமா


தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களுக்கு விருந்து ஆதவன்.  சூர்யா தன்னை ஒரு கமர்சியல் ஹீரோ ன்னு  காட்டியிருக்கிற படம். வழக்கமான சூர்யா படம் இல்லாம கமர்சியலுக்கும் தன்னால பிட் ஆக முடியும்னு நிருபிச்சிருக்கார். தன்னை
 மக்கள் தலைவன்னு காமிக்க ஆசை படுற அத்தனை ஹீரோக்களும் பண்றது பஞ்ச் டயலாக் பேசுறது. இதுவரைக்கும் சூர்யா படத்துல இப்படிப்பட்ட அபத்தங்கள் எதுவும் இல்லாம இருந்துச்சு. ஆதவன் படம் ஒபநிங்க்ல சாயாஜி ஷிண்டே நம்மள அழிக்க இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் அப்படின்னு சொன்னதுமே சூர்யா பாட்டோட பைக்கோட பட்டைய கிளப்பிட்டு வர்றாரு - நல்லதானே இருந்தீங்க சூர்யா உங்களுக்குமா இந்த நோய்.

ஒரு வரி கதைதான். குழந்தைகளோட உறுப்புகளை திருடி வெளிநாட்டுக்கு விக்கிற ஒரு கும்பலை விசாரிக்க வர்ற நீதிபதியை கொல்லனும். கூலிபடையை சேர்ந்த கொலையாளியா வர்றாரு சூர்யா.  முதல் குறில நீதிபதி தப்ப கதை சூடு பிடிக்குது.

நீதிபதி பிரஸ் மீட் வைக்க அங்க கூடியிருக்கிற பதிரிக்கையாளர்கள்ள ஒரு தமிழ் நிருபர் மட்டுமே அபத்தமா கேள்வி கேக்குற மாதிரி சொல்லியிருக்காரு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். அட ஏன் சார் உங்களுக்கு இந்த புத்தி. நீதிபதி அது யார்யா அது தமிழ்ல ஒருத்தன் கேள்வி கேட்டானே  அப்படின்னு கேக்கறதும் தமிழில் பேசினா தமிழனா இருந்தா இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு.

அதுக்கப்புறம் நீதிபதிய சூர்யா கொலை செஞ்சாரா இல்லையாங்கறதுதான் கதை. ஒரு  வரி கதையை இளுளுளுளுத்து ஆனா அழகா சொல்லியிருக்காங்க. படம் முழுக்க வர்ற வடிவேலு தீபாவளி வெடி வேலுவா சிரிக்க வெச்சிருக்காரு. படம் முழுக்க அவரோட நகைச்சுவை சிரிக்க வைக்குது. சபாஷ் வடிவேல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் சரோஜா தேவி நடிச்சுருக்காங்க. நயன்தாரா படத்துல வந்துட்டு போறாங்க. நயன்தாரா அறிமுகமாகிற இடத்துல  சரோஜா தேவி அழகா ஒரு வசனம் சொல்றாங்க. நீ அடுத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும் அடுத்தவங்கள கெடுக்கிற மாதிரி இருக்க கூடாது அது ஏதோ பிரபுத்துவமான வார்த்தையா தெரியுது.

 பத்து வயசு பையனா சூர்யாவை உலா வர வெச்சிருக்காங்க. நல்லாத்தான் இருக்கு

கணேசின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி

டான் மேக்ஸ் -ன் எடிட்டிங் பார்க்க வைக்கிறது


மொத்தத்தில் நிறம் மனம் குணம் காரம் நிறைந்ததவன் ஆதவன்

Friday, October 9, 2009

excuse me boss you have a text message

ஒன் மெசேஜ் ரிசிவ்டு


அறிவியலின் அழகான அற்புதம் இது. அறிமுகமான காலத்தில் ஆடம்பர பொருளாகக் கருதப்பட்ட இது இன்று அத்தியாவசியப் பொருளாக உலா வருகிறது. காலையில் எழுந்ததும் குட் மார்னிங் சொல்வது தொடங்கி விஜயையும் அஜித்தையும் அவமானப் படுத்துவதில் பயணித்து சர்தர்களின் சரித்திரத்தையும் சரமாரியாக சரவெடி வெடித்து இறுதியில் நள்ளிரவில் தூங்கிட்டிங்களா என தூங்கி கொண்டிருப்பவர்களை விசாரிப்பது வரை தொடர்கிறது இந்த எஸ் . எம்.எஸ். பயணம். இதில் பல விஷயங்கள் ஆரோக்கியம் அற்றதாக இருப்பினும் பலருக்கு எந்த கெடுதலும் விளைவிப்பதில்லை.

ஆனால் எதாவது ஒரு மதத்தின் கடவுளை குறிப்பிட்டு அவருடைய நாமத்தை இன்று இரவுக்குள் நூறு முறை சொல்லுங்கள் உங்களுக்கு காலையில் அதன் பலன் தெரியும் அதோடு இதை குறைந்தது பத்து பேருக்காவது பார்வர்ட் செய்யுங்கள் என்ற 'அன்பான' வேண்டுகோளோடு எஸ் . எம்.எஸ். கல் சர்வ சாதரணமாக வளைய வருகிறது. இதாவது பரவாயில்லை இன்னொரு மெசேஜ்
 அடிக்கடி வரும் அதாவது வெரி வெரி  அர்ஜென்ட்  ஐந்து வயது குழந்தைக்கு அவசரமாக ஒ பாசிடிவ் இரத்தம் தேவை படுகிறது இந்த நம்பெரை காண்டக்ட் பண்ணுங்க அப்படின்னு வரும் நாமளும் அடிச்சு பிடிச்சு அதுல குறிப்பிட்ட அந்த எண்ணை தொடர்பு கொண்டா அது சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும்  அல்லது யாருமே எடுக்க மாட்டங்க 

நமக்கு அனுப்பினவங்களை தொடர்பு கொண்டா இது எனக்கு என்னோட நண்பர்  அனுப்பினதுன்னு  கூலா சொல்வாங்க நமக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்தா குறைந்த பட்சம் அது யாரை பற்றி வந்துருக்குன்னு தெரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம் நம்ம நண்பர்களுக்கு அனுப்பினா அவங்களையாவது நாம தொந்தரவு பண்ணாம இருக்கலாம் 

அறிவியல் எண்ணைக்குமே அழகானதுதான்  அதை நாம எப்படி பயன்படுத்துறோம் அப்படிங்கறதுலதான் விசயமே  இருக்கு 

அன்புடன் 
அ.ஜெ. ராஜசேகர்


Thursday, October 8, 2009

நட்சத்திரங்கள்

நிலா பெண்ணுக்கு

அப்படி என்னதான் அவசரமோ

புள்ளிகளை மட்டும்

வைத்துவிட்டு கோலமிடாமல்

சென்றுவிட்டதே
நான் எழுதிய முதல் கவிதை இது