நாளைக்கு வருவாக
மனசுக்குள்ள ஏனோ
மல்லிகை பூ வாசம்
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
கல்யாணத்துக்கு மறு நாளே
மல்லுக்கு போனவக
இன்னைக்குதான் போனுல சொன்னாக
நாளைக்கு வருவாகன்னு
காலம் காத்தாலையே
காக்கா கரைந்சுது
கண்ணான காதலன்
என்னோட கை புடிக்க
நாளைக்கு வருவாகன்னு
கையும் ஓடல காலும் ஓடல
என்ன செய்றேன்னு எனக்கே தெரியல
ராத்திரியே வாச தெளிச்சு
கோலம் போட்டு
வழி மேல விழி வெச்சு
காத்திருக்கேன்
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
பாகிஸ்தான் பரங்கிகலை
பந்தாடும்போது பட்டினி கிடந்தாரோ
பசியாரினாரோ தெரியல
வந்ததுமே வெடக்கோழி வெட்டி
விருந்து வைக்கோணும்
தவமிருந்து காத்திருக்கேன்
தங்க மகன்
நாளைக்கு வருவாகன்னு
வந்ததுமே பாராட்டு விழாவாம்
பத்திரிக்கையும் டிவி யும் மாறி மாறி சொல்லிச்சு
மாலையும் மணி மகுடமும் சூடி
மேடைல இருந்தா எப்படி இருக்கும்
ஏக்கத்தோட காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
அடுத்த வீட்டு அக்காட்டையும்
பக்கத்து வீட்டு பரிமலாகிட்டையும்
ஏற்கனவே சொல்லியாச்சு
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
போருக்கு இடையிலும்
போன மாசம் ஆசையாசையாய்
மகராசன் எடுத்து அனுப்புச்ச
சேலை கட்டி காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
மொத ராத்திரி
மொத மொதல்ல
ரகசியமா சொன்ன ரகசியத்தை
நியாபகம் வைச்சிருக்கரோ
வைக்கலையோ தெரியல
வந்ததுமே கேக்கோணும்
யந்திரமா காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
மல்லிகை பூ மத்தியில
ரோசா பூ ஒன்னு வெச்சா
கண்ணான காதலனுக்கு
கொள்ளை ஆசை
வந்ததுமே வாரி அணைச்சு
தட்டாமாலை சுத்துவாரா
காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
உள்ளூரில் கலவரமாம்
சிலையாகிப் போன தலைவனுக்கு
மாலை போட்டதுல
அந்த கலவரமும்
என்னை கலவரப் படுத்தல
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
கண்ணுல கனவோட
நெஞ்சுல ஆசையோட
நான் இருந்தப்ப திபு திபுன்னு
வந்த போலிசு சொல்லிச்சு
உள்ளூரு கலவரத்துல
என்னவரு வந்த வண்டியும்
எரிஞ்சுருச்சாம்
போஸ்ட் மார்டம் முடிஞ்ச பெறகு
பிணம்
நாளைக்கு வருமுன்னு
Wednesday, October 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
The best thought-provoking poem I ever read and will ever read in future too. I was moved to tears. The poem is remiscent of English Poem, "Home they brought her warrior dead, ...... "
We expect more such creativity from Mr.AJR.
Post a Comment