Wednesday, January 19, 2011

கருப்புப்பணம் - கொண்டு வர மறுக்கும் கருப்பு ஆடுகள்

50 காசு கொடுத்து வாங்கும் தீப்பெட்டி முதல் 50 லட்சங்கள் வரை செலவழித்து வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அப்பாவி பொது ஜனம் வரி கட்டி விட்டுதான் வாங்க முடியும். அன்றாடங்காய்ச்சிகள் முதல் சம்பள சாதி வரை வரிகள் என்னும் வரையறைக்குள் நிற்க  சில தொழில் அதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள் எனும் பண முதலைகளால் இந்திய பணம் சுமார் 25 லட்சம் கோடிகள் முதல் 75 லட்சம் கோடிகள் வரை முடங்கி கிடக்கிறது சுவிஸ் வங்கியில் .    முடங்கி கிடக்கும் இந்த பணம் வந்தால் வசந்தமாகிவிடும் நாடு என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுது இந்தப் பணம் பயன்படுத்தப்படும் விதம்தான் நம்மை நடுக்கம் கொள்ள வைக்கிறது. நம் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கவும், பங்குச்சந்தையை முடக்கவும் முதுகெலும்பாக பயன்படுத்தப் படுகிறது என்பதுதான் உச்சந்தலையில் அச்சம் எனும் ஆணியை அடித்து செல்கிறது. சுவிஸ் வங்கி இவ்வாறு ரகசியம் காப்பதே இது அத்தனைக்கும் காரணம் என்பது அடிப்படை காரணம்.  இந்த ரகசிய ரசவாதம் சுவிஸ்சில் எப்படி தொடங்கியது என்றால்...

ரகசிய கணக்குகளின் ரகசியம்

 ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டுகொண்டிருந்தபொது யூதர்களின் வங்கி கணக்குகளை கைப்பற்றி விட்டு அவர்களை கொன்றுவிட திட்டமிட்டார். இதன் விளைவாக சுவிஸ் நாடு வங்கிகளில்  கணக்குகளின் ரகசியம் என்பதை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை கணக்கு வைத்திருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த ரகசியம் வெளிவிடப்படாமல் ரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளது.  இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று வங்கிகள் வாடிக்கையாளர்களின் பெயர்களில் கணக்கு வைக்காமல் வெறும் எண்களை வைத்தே பராமரித்து வருகிறது.

நிலைமை இப்படி நீடிக்க உலக அளவில் நிதி நெருக்கடி அரசுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்காவும் ஜெர்மனியும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்க அந்த வங்கிகளும் 20 ஆயிரம் அமெரிக்கர்களின் கணக்குகளையும் 1400 ஜெர்மானியர்களின் கணக்குகளையும் கொடுத்துள்ளது. இதில் வெறும் 600 பேர்தான் ஜெர்மானியர்கள் மற்றவர்கள் பிற நாடுகளை சார்ந்தவர்கள் இந்தியர்களும் இதில் இல்லாமல் இல்லை இந்த விவரங்களை அளிப்பதற்கு வங்கிகள் தயார் ஆனால் அதை வாங்குவதற்கு நம் அரசு தயாராக இல்லை. இவ்வாறு முடக்கப் பட்டிருக்கும் பணம் ஏறத்தாழ 25 லட்சம் கோடிகள் முதல் 75 லட்சம் கோடிகள் வரை இருக்கலாம் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு. இந்த பணம் வெளிக்கொண்டு வரப்பட்டால் இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு வரியற்ற பட்ஜெட் போட முடியும் என்கிறார் பா.ஜ.க. வை சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி.


கணக்கு துவங்க

சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்க 5ஆயிரம் சுவிஸ் பணம் இருந்தாலே போதும் துவங்கி விடலாம். ஆனால் இந்த கணக்கில் கருப்பு பணத்தை கற்பு கெடாமல் பாதுகாக்க முடியாது. அதற்கென ஸ்பெஷல் அக்கவுண்ட் ஆரம்பித்தால்தான் ஆயிற்று. அது இந்நாட்டு மன்னர்களால் (எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாயிற்றே)  முடிகின்ற காரியம் அல்ல. அது மந்திரிகளால் மட்டுமே இயலுகின்ற காரியம் இந்திய பணம் சுமார் ஒன்றரைக்கோடி வேண்டும். இது இருந்தாலே நீங்கள் இருக்கின்ற இடத்திலிருந்து ஆரம்பித்துவிடலாம் ஆட்டத்தை. அதற்கு ஏற்கெனெவே அங்கு கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் உங்களை அறிமுகப்படுத்த வேண்டும் அவ்வளவுதான். அதன் பின்னர் சுவிஸ் வங்கியின் பிரதிநிதி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார் ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டு விடும். அதன் பின்னர் எவ்வளவு பணத்தை கொண்டு கொட்டினாலும் நீங்கள் அதற்க்கு வருமான கணக்கு  காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் இந்த கொள்ளைக்காரர்களுக்கு இன்பம். 

எந்தெந்த கட்சிகளுக்கு

பொதுவாக இந்திய இனம் பொது கழிவறையில் மட்டுமே சாதி மத பேதமின்றி இன மத பேதமின்றி இருக்கிறது என்பார்கள் அது போல இந்த விவகாரத்திலும் கட்சி பேதமின்றி அனைத்து கட்சிகளின் க(றை)ரை வேட்டிகளும் குர்தாக்களும் கணக்கு வைத்துள்ளனர்.  எல்கினா என்பவர் எழுதின புத்தகத்தில் இடது சாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார் என்பது பத்திரிகை செய்தி. அது போல ஒரு முன்னாள் பிரதமருக்கு சில ஆயிரம் கோடிகள் இந்த வங்கியில் உள்ளது என்று வெளிநாட்டு இதழ் ஒன்று எழுதியுள்ளது. ஆனால் இந்த செய்தியை மறுக்க அவர் உயிரோடு இல்லையென்றாலும் அவரது கட்சியோ அல்லது அவரது குடும்பத்தினரோ அதை மறுக்கவும் இல்லை பொங்கியெழவும் இல்லை. என்றால் அவருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சரி அந்த கட்சிதான் இவ்வாறு என்றால் அடுத்து வந்த எதிர் கட்சியும் இதை கண்டு கொள்ளவில்லை என்றால் தங்களுக்குள்ள தொடர்பு எங்கே வெட்ட வெளிச்சமாகி விடுமோ என்ற பயம்.

இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் இப்போது சாட்டையை கையில் எடுத்துள்ளது. முடங்கி இருக்கும் கருப்பு பணம் தேசத்தின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் இந்த பணம் யார் யாருக்கு சொந்தம் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது ஆனால் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது

இந்நிலையில் இந்த கணக்கு விவரங்களை வெளியிட போவதாக விக்கி லீக்ஸ் இணைய தளம் கூறியுள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் பெயர் விவரங்கள் முறையாக வெளி வந்து விட்டால் பிரச்சனை இல்லை மாறாக இந்த விவரங்கள் சீனாவிடமோ அல்லது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பிடமோ சிக்கினால் அவர்கள் அதை வைத்துக்கொண்டு நமது நாணயமிக்க அரசியல்வாதிகளை பிளாக் மெயில் செய்ய கூடும் என்பதுதான் அச்சத்தின் அளவுகோலை அதிகரிக்கிறது.

படித்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள் கருத்துக்களை

அன்புடன்
அ.ஜெ.ராஜ சேகர்

3 comments:

Anonymous said...

nantraga ullathu naatin nilai appadiye padam pidikkap pattullathu

sam

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இந்த தடவையாவது தொடர்ந்து எழுதுங்கள் ராஜசேகர்

சுடும் நிலா said...

கண்டிப்பாக

அக்கறைக்கு நன்றி